Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 026


திருக்குறள் (26) 
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு! 
(595)

நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அது நிற்கும் நீரின் உயரத்தின் அளவுக்கேற்றதாய் இருக்கும்! அதைப்போல மனிதர்களின் உயர்வானது அவர்களின் உள்ளத்தின் உயர்வைப்பொறுத்தே அமையும்!

மனிதர்கள் மனத்துக்கேற்ப வாழ்வர்! நல்லதை நினைத்து நல்லதையே செய்து வந்தால் அவர்களின் உயர்வைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது! 

அனைய = ஏற்ப
நீட்டம் = நீளம்

திருக்குறளும் என் பார்வையும்..!- 025


திருக்குறள் (25) (30/07/08) பிறன்மனை நோக்காத பேராண்மை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு 
( 148 )

பிறர் மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமே அல்ல; உயர்ந்த ஒழுக்கமுமாகும். 

வள்ளுவர் பிறன்மனை நோக்காத பெரிய தர்மத்தை பெரிதும் வலியுறுத்துகிறார்! அது தர்மம் மட்டுமல்ல! அதுதான் பெரியவர்களின் பெருமையும் ஆகும்!

திருக்குறளும் என் பார்வையும்..!- 024


திருக்குறள் (24) 
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல பகைவர் தொடர்பு 
(882)

வாளைப் போல வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை! ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்! 

வள்ளூவர் கருத்து என்னவென்றால் வாளைப்போல மறையாமல் எதிரில் நின்று வெளிப்படையாக நம்மைத் தாக்க முயலும் எதிரிகளிடம் இருந்து நம்மை எளிதில் காத்துக்கொள்ள முடியும்! ஏனென்றல் எதிரிகள் நேரில் நின்று தாக்குபவர்கள்! 

ஆனால் உறவினர் என்று சொல்லிக்கொண்டு நம்முடனே இருந்து நம்மை அழிக்க முயலும் உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு எப்போது அஞ்சவேண்டும்! 

ஏன் என்றால் ஊர்கெடுக்காது ; உறவுதான் கெடுக்கும் என்பார்கள் பெரியோர்! 


கேள் = உறவு

திருக்குறளும் என் பார்வையும்..!- 023


திருக்குறள் (23)

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். 
(807)

அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்தபோதிலும், தம் அன்பு நீங்காமலிருப்பர்.

அதாவது அன்பையே நினைத்து அன்பைமட்டுமே வழங்கி அன்புக்காகவே ஏங்கிப பழகும் நண்பர் தாம் அன்பு செலுத்தியவர் தமக்கு கெடுதல்களே செய்தாலும் தமது அன்புநிலை மாறாமல் என்றும் அன்புடைய நண்பராய் இருந்து வருவர்! 

அழிவந்த = கெடுதல்கள்
அன்பறார் = அன்பு மாறார்
கேண்மை = நட்பு

திருக்குறளும் என் பார்வையும்..!- 022


திருக்குறள் (22) 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு? 
(781)

நட்பினைப்போல் செயற்கரிய காரியங்களைச் செய்ய வைக்கும் அரியது எதுவும் இல்லை! அத்தகைய நட்பைப்பெற்றவர் தமக்கு எதிராகச் செயல்படும் பகைவர்களையும் அவர்களின் செயல் களையும் தடுப்பதுமான பாதுகாப்பு அரண் அந்த நட்பைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!! 

சாதாரணமாச் சொல்லனும் னா நட்பு போல வியப்பான செயல் செய்யும் ஒரு உணர்வு உலகத்தில் கிடையாது!
அந்த நட்பு எந்த எதிரியையும் அவர் செயல்களையும் முறியடிக்கும்! 


இன்னும் சொல்லப்போனால் நட்புஒன்றுதான் வாழவைக்கும் என்னைப்போன்ற தாய் இழந்தோரையும்!


யாவுள = எது உள்ளது?
காப்பு = பாதுகாவல்

திருக்குறளும் என் பார்வையும்..!- 021


திருக்குறள் (21) 

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு! 
(467)

செய்யத்தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்த பின் எண்ணிப்பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

ஒரு காரியத்தில் இறங்கும்போது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்!
அப்படி ஆராய்ந்து அந்த காரியத்தில் இறங்கியபின் பிறகு அதைப்பற்றி எண்ணுவது குற்றமாகும்! 


துணிக = செயல் படுக
கருமம் = செயல்
இழுக்கு = குற்றம்

திருக்குறளும் என் பார்வையும்..!- 020


திருக்குறள் (20) 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 
(428)

அஞ்சத்தக்கதைக்கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும். அஞ்சத்தக்கதைக்கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் செயலாகும்!

எந்த விஷயத்தை கண்டு அஞச வேண்டுமோ அதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம்!
எதைக்கண்டு அஞ்சவேண்டுமோ அதைக்கண்டு அஞ்சுவது அறிவுடையவர்கள் செயலாகும்! 


அதாவது அறிவுடையவர்கள் அஞ்ச வேண்டிய விஷயத்துக்கு அஞ்சுவார்கள்! வீராப்பு காட்ட மாட்டார்கள்! 

பேதைமை = முட்டாள் தனம்