Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 033


திருக்குறள் (33) 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.(291)


வாய்மை அதாவது உண்மை என்று சொல்லப்படுவது எதுஎனில் எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படாத வகையில் சொல்லப்படுதல் யாவும்தான்!

வள்ளுவர் கூற விழைவது யாதெனில் சில சமயங்களில் உண்மையை சொல்லாமலும் இருக்கலாம்; அதனால் சில உயிர்களுக்கு நன்மை கிடைக்குமெனில்!

உண்மை யென்பதும் பொய்யென்பதும் பிற உயிர்களுக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பொறுத்ததுதான்! 

நம்மால் சொல்லப்படும் ஒரு பொய் ஓர் உயிரைக்காக்குமெனில் அப்பொய் மன்னிக்கப்படுகிறது என்பதும் நாம் கூறும் உண்மை ஒருவருக்குத் தீமை விளைவிக்குமெனில் அவ்வுண்மை தவிர்க்கப்படலாம் என்பதும் வள்ளுவர் கூற விழைவதாகும்.

திருக்குறளும் என் பார்வையும்..!- 032


திருக்குறள் (32) 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யறக
சான்றோர் பழிக்கும் வினை. 
(656)


பெற்ற தாயே பசித்து வருந்தி இருந்தாலும் பெரியோர் பழிக்கின்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது. 

உலகில் ஒருவனுக்கு மிக உயர்ந்த உறவு தாய் உறவு ஆகும்! அந்த தாயே பசியுடன் இருந்தாலும் அந்த பசியைப்போக்கக் கூட ஒருவன் பெரியோர் தாழ்வாக நினைக்கும் செயல்களைச் செய்யக்கூடாது! 

தாயிற்சிறந்த தொரு கோயிலில்லை என்றாலும் உலகம் பழிக்கின்ற செயலைத் தாய் காரணமாகக்கூட செய்யக்கூடாதென்பதும் சிறந்த தாய் இதை சற்றும்விரும்ப மாட்டாள் என்பதும் வள்ளுவ கருத்து.

ஈன்றாள் = தாய்
பழிக்கும் = தாழ்வாக நினைக்கும்
வினை = செயல்

திருக்குறளும் என் பார்வையும்..!- 031


திருக்குறள் (31) 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. (1081)


சோலையில் தலைவியைக் கண்ட தலைவன் அவள் அழகைக்கண்டு கீழ்க்கண்டவாறு வியக்கிறான்:

இங்கே தனிமையில் வந்து மிக ஒயிலாக அழகு மயிலாக காதுகளில் கனத்த குழல்களை அணிந்து அழகே உருவாக நிற்கும் இந்த வஞ்சிமகள் கொஞ்சுதமிழ் பேசும் பெண்தானா? இல்லை தேவலோகத்திலிருந்து மெதுவாக இறங்கிவந்த தேவதையோ? இவள் யாரென்று அறிய முடியாமல் என் மனம் மிகவும் மயங்குகிறது! 


திருக்குறளும் என் பார்வையும்..!- 030


திருக்குறள் (30) 

தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து. (828)


எதிரிகள் நம்மைத் தொழும்கைகளில் கொலைக்கருவி மறைந்திருப்பது போல அவர்கள் விடும் கண்ணீரிலும் கொலை ஆயுதம் மறைந்திருக்கும்! 

நம் எதிரிகள் நம்மைக் கண்டு கைகூப்பி வணங்கும்போது நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்! காரணம் என்ன வென்றால் அவர்களின் தொழும் கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும்! அவர்கள் விடுகின்ற கண்ணீரில்கூட கொலைநோக்கமே நிறைந்திருக்கும் என்று நாம் உணரவேண்டும்! 

ஒன்னார் = ஒத்தவர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 029


திருக்குறள் (29) 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
 (396)

மணல் கேணியானது தோண்டத்தோண்ட நீரூறி நமக்கு தாகத்தைத் தணிப்பது போல் நாம் கற்கும் நூல்களானது கற்கும்தோறும் நமக்கு அறிவை வழங்கிவருகிறது! 

எப்படி கிணறு நமக்கு எத்தனை ஆழம் தோண்டத் தோண்ட நீர் வழங்கி
நமது தாகத்தைத்தீர்த்து வைக்கிறதோ அதைப்போல நாம் கற்கும் நூல்கள் நமக்கு அறிவுத்தாகத்தைத் தீர்த்துவருகிறது! 


தொட்டனைத்து = தோண்டும்போதெல்லாம்
கேணி = கிணறு

திருக்குறளும் என் பார்வையும்..!- 028


திருக்குறள் (28) 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 
( 127 )

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக்காக்கத் தவறினாலும் நாவை மட்டுமாவது காக்க வேண்டும்! காக்கத்தவறினால் சொற்குற்றங்களால் அவமானப்பட்டு துன்பமடைய நேரிடும்! 

நாம் காக்க வேண்டிய புலன்கள் ஐந்து!

1.கண் = தீயவற்றினைப்பார்ப்பதிலிருந்து
2.காது = பொல்லாதவை கேட்பதிலிருந்து
3.மூக்கு = சில நறுமணங்களும் அவற்றால் வரும் தீங்குகளிலிருந்தும்
4.உடல் = தீயவற்றை அனுபவிப்பதிலிருந்து
5.நாக்கு = பொல்லாங்கு கூறுவதிலிருந்து 


இவற்றில் எவற்றைக் காக்கத் தவறினானும் துன்பங்கள் தாம் வந்தடையும் என்பதில் ஐயமில்லை! ஆனால் இவற்றுள் மிக முக்கியமாய் கட்டுப்படவேண்டியது நாக்கு! 

சோற்றைக் கொட்டினால் அள்ளிவிடலாம்.ஆனால் கொட்டிய சொற்களை அள்ளமுடியாது அல்லவா? 

யா காவார் = யாது காக்காவிடினும்
சோகாப்பர் = துன்பப்படுவர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 027


திருக்குறள் (27) 

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 


மற்றவரிடம் காணும் குறறங்களைத் தம்மிடமும் காணும் உள்ளம் நம்மிடம் இருந்தால் இந்த உலகத்தில் எந்த மனிதருக்கும் தீங்குகளே இல்லை!
மனிதருக்கு எப்போதுமே பிறர் மீது குற்றம் சாட்டுவதுதான் இயல்பாக இருந்து வருகிறது! தம் குற்றத்தைப் பற்றி எண்ணுவதே இல்லை!
ஆனால் பிறர் குற்றத்தைப்போல் தம்குற்றத்தையும் காணும்போது அங்கே புரிதல் வருகிறது! எந்த வித தீங்கும் வருவதில்லை! 


ஏதிலார் = அயலார்
தீது = தீங்கு
மன்னும் = நிலை பெற்ற

திருக்குறளும் என் பார்வையும்..!- 026


திருக்குறள் (26) 
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு! 
(595)

நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அது நிற்கும் நீரின் உயரத்தின் அளவுக்கேற்றதாய் இருக்கும்! அதைப்போல மனிதர்களின் உயர்வானது அவர்களின் உள்ளத்தின் உயர்வைப்பொறுத்தே அமையும்!

மனிதர்கள் மனத்துக்கேற்ப வாழ்வர்! நல்லதை நினைத்து நல்லதையே செய்து வந்தால் அவர்களின் உயர்வைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது! 

அனைய = ஏற்ப
நீட்டம் = நீளம்

திருக்குறளும் என் பார்வையும்..!- 025


திருக்குறள் (25) (30/07/08) பிறன்மனை நோக்காத பேராண்மை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு 
( 148 )

பிறர் மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமே அல்ல; உயர்ந்த ஒழுக்கமுமாகும். 

வள்ளுவர் பிறன்மனை நோக்காத பெரிய தர்மத்தை பெரிதும் வலியுறுத்துகிறார்! அது தர்மம் மட்டுமல்ல! அதுதான் பெரியவர்களின் பெருமையும் ஆகும்!

திருக்குறளும் என் பார்வையும்..!- 024


திருக்குறள் (24) 
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல பகைவர் தொடர்பு 
(882)

வாளைப் போல வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை! ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்! 

வள்ளூவர் கருத்து என்னவென்றால் வாளைப்போல மறையாமல் எதிரில் நின்று வெளிப்படையாக நம்மைத் தாக்க முயலும் எதிரிகளிடம் இருந்து நம்மை எளிதில் காத்துக்கொள்ள முடியும்! ஏனென்றல் எதிரிகள் நேரில் நின்று தாக்குபவர்கள்! 

ஆனால் உறவினர் என்று சொல்லிக்கொண்டு நம்முடனே இருந்து நம்மை அழிக்க முயலும் உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு எப்போது அஞ்சவேண்டும்! 

ஏன் என்றால் ஊர்கெடுக்காது ; உறவுதான் கெடுக்கும் என்பார்கள் பெரியோர்! 


கேள் = உறவு

திருக்குறளும் என் பார்வையும்..!- 023


திருக்குறள் (23)

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். 
(807)

அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்தபோதிலும், தம் அன்பு நீங்காமலிருப்பர்.

அதாவது அன்பையே நினைத்து அன்பைமட்டுமே வழங்கி அன்புக்காகவே ஏங்கிப பழகும் நண்பர் தாம் அன்பு செலுத்தியவர் தமக்கு கெடுதல்களே செய்தாலும் தமது அன்புநிலை மாறாமல் என்றும் அன்புடைய நண்பராய் இருந்து வருவர்! 

அழிவந்த = கெடுதல்கள்
அன்பறார் = அன்பு மாறார்
கேண்மை = நட்பு

திருக்குறளும் என் பார்வையும்..!- 022


திருக்குறள் (22) 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு? 
(781)

நட்பினைப்போல் செயற்கரிய காரியங்களைச் செய்ய வைக்கும் அரியது எதுவும் இல்லை! அத்தகைய நட்பைப்பெற்றவர் தமக்கு எதிராகச் செயல்படும் பகைவர்களையும் அவர்களின் செயல் களையும் தடுப்பதுமான பாதுகாப்பு அரண் அந்த நட்பைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!! 

சாதாரணமாச் சொல்லனும் னா நட்பு போல வியப்பான செயல் செய்யும் ஒரு உணர்வு உலகத்தில் கிடையாது!
அந்த நட்பு எந்த எதிரியையும் அவர் செயல்களையும் முறியடிக்கும்! 


இன்னும் சொல்லப்போனால் நட்புஒன்றுதான் வாழவைக்கும் என்னைப்போன்ற தாய் இழந்தோரையும்!


யாவுள = எது உள்ளது?
காப்பு = பாதுகாவல்

திருக்குறளும் என் பார்வையும்..!- 021


திருக்குறள் (21) 

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு! 
(467)

செய்யத்தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்த பின் எண்ணிப்பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

ஒரு காரியத்தில் இறங்கும்போது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்!
அப்படி ஆராய்ந்து அந்த காரியத்தில் இறங்கியபின் பிறகு அதைப்பற்றி எண்ணுவது குற்றமாகும்! 


துணிக = செயல் படுக
கருமம் = செயல்
இழுக்கு = குற்றம்

திருக்குறளும் என் பார்வையும்..!- 020


திருக்குறள் (20) 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 
(428)

அஞ்சத்தக்கதைக்கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும். அஞ்சத்தக்கதைக்கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் செயலாகும்!

எந்த விஷயத்தை கண்டு அஞச வேண்டுமோ அதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம்!
எதைக்கண்டு அஞ்சவேண்டுமோ அதைக்கண்டு அஞ்சுவது அறிவுடையவர்கள் செயலாகும்! 


அதாவது அறிவுடையவர்கள் அஞ்ச வேண்டிய விஷயத்துக்கு அஞ்சுவார்கள்! வீராப்பு காட்ட மாட்டார்கள்! 

பேதைமை = முட்டாள் தனம்

திருக்குறளும் என் பார்வையும்..!- 019


திருக்குறள் (19) 

ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்
(380)

ஊழை ( விதியை )விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்!

நம்மைப் படைத்த இறைவன் வகுத்த விதியை வெல்லக்கூடிய சக்தி வேறு எதுவும் இல்லை!
அதனை விட வலியது என நாம் நினைக்கும் ஒரு சக்தி யானது விதியை வெல்ல முயற்சி செய்வது போல் தெரிந்தாலும் இறுதியில் விதியின் சிரிப்பு தான் நம்மை வெல்லும்! 


ஆக விதியை வெல்லும் வலிமை யாருக்கும் கிடையாது! 

ஊழ் = விதி
வலி = வலியது

திருக்குறளும் என் பார்வையும்..!- 018


திருக்குறள் (18) 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப் பதில் 
(621)

துன்பம் வரும்போது அதற்கு மனக்கலங்காமல் மகிழ்வானாக! அத்துன்பத்தைத்தொடர்ந்து அழிக்கவல்லது அம்மகிழ்ச்சி போல வேறொன்றில்லை!

வாழ்க்கையில் துன்பம் வரும்போது அத்துன்பத்தைக்கணடு வருந்தி அழாமல் அத்னைக்கண்டு சிரிக்க வேண்டும்! அவ்வாறு சிரிப்பதே அந்த துன்பத்தை எதிர்கொள்ளும் மிகச்சிறந்த வழியாகும்! 

சிலர் இந்த குறளை வேறுவிதமாய் எடுத்துக்கொண்டு குறை கூறுவர்!
உதாரணமாக கண்ணதாசன் அவர்களின் ஒரு பாடல் '' துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லிவைத்தார் வள்ளுவர் சரிங்க! பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல்துடிக்கையில் யார்முகதில் பொங்கிவரும் சிரிப்பு?''


ஆனால் எனது கருத்து என்ன வெனில் துன்பம் வரும்போது அதற்காய் துவண்டுபோய் அழுது மூலையில் ஒடுங்கிக்கிடந்தால் அத்துன்பம் ஓடி ஒளிவது இல்லை அல்லவா?
வரும் துன்பத்தை எதிர்நோக்கிப்புன்னகைத்து துணிவுடன் எதிர்கொண்டால் அத்துன்பம் காணாமல் போய்விடும் என்பதே வள்ளுவர் கூறும் உண்மை!


இடுக்கண் = துன்பம்
அடுத்தூர்வது = எதிர்கொள்வது
அஃதொபபது இல் = அதற்கு இணையானது இல்லை

திருக்குறளும் என் பார்வையும்..!- 017


 திருக்குறள் (17) 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். 
(517)

இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்கவேண்டும்!

எந்த ஒரு செயலையும் அதனை செய்யவேண்டிய சரியான முறை அறிந்து யார் சரியாக முடித்துவைப்பார்கள் என்று ஆராய்ந்து அறிந்து அந்த செய்லை அவர்களிடம் ஒப்படைப்பது அறிவாளர்களது கடமையாகும்! 

எல்லா செயல்களும் எல்லோராலும் செய்யமுடியும் என்று சொல்ல முடியாது! அதற்கென்று தகுதி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பதே அறிவாளர்களின் வெற்றியின் ரகசியம்! 

ஆய்ந்து = ஆராய்ந்து
அவன்கண் = அவனது பொறுப்பில்

திருக்குறளும் என் பார்வையும்..!- 016


திருக்குறள் (16)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. 
(411)

ஒருவனுக்குச் சிறப்புடைய செல்வமானது கேள்வியால் எல்லாப்பொருளையும் கேட்டறியும் செல்வமே ஆகும். அச்செல்வமே பிற செல்வங்கள் எல்லாவற்றுக்குள்ளும் தலைமையானது! 

உலகத்துள் உள்ளசெல்வத்தில் எல்லாம் முக்கியமான செல்வம் என்ன தெரியுமா? நம் பகுத்தறிவால் கேட்டறியும் கேள்வி ஞானம்தான்! அந்த கேள்வி ஞானமானது எல்லா செல்வங்களிலும் தலையான செல்வமாக கருதப்படுகிறது! 

உலகத்தில் புகழ்பெற்று விளங்கிய பல சான்றோர்கள் முறையான கல்வியறிவு பெற்றிடாமலேயே கேள்வி ஞானத்தாலேயே மனிதம் கொண்டு மனிதம் வென்று இவ்வுலகைக் கட்டியாண்டவர்கள் என்பதில் ஐயமில்லைதானே!

திருக்குறளும் என் பார்வையும்..!- 015


திருக்குறள் (15) 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 
(151)

தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்து தாங்கிக் கொள்ளும் நிலம்போலத் தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ளுதல் முதன்மையான அறமாகும்!

இந்த பூமியானது தம்மை எத்தனை தோண்டினாலும் தோண்டுபவரையும் தாங்கி மேலும் அவருக்கு வேண்டியன எல்லாம் வழங்கும் இயல்புடையது! 

அதைப்போல தம்மை இகழ்வாரையும் பொறுத்துக்கொண்டு அவரைக் காத்துவருவது சான்றோரது தலையாய குணம் ஆகும்! 

அகழ்வார் = தோண்டுபவர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 014


திருக்குறள் (14) 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 
(121)

ஒருவன் அடக்கத்துடன் வாழ்வானாயின் அவ்வடக்கம் அவனை விண்ணுலகத்தில் வைத்து போற்றப்படும் அளவுக்கு மேன்மையுடையவனாய் மாற்றிவிடும்! அடங்காமையோ ஒருவனை கொடிய நரகத்தில் கொண்டு செலுத்திவிடும்! அதாவது நரகத்துக்கிணையான துன்பங்களை இவ்வுலகிலேயே அனுபவிப்பான் என்கிறார் வள்ளுவர்!

ஒருவன் எவ்வளவு கற்றறிந்தாலும் அடக்கம் என்பது மிக அவசியம்!
அந்த அடக்கம் அவனை மேலானவர்களில் ஒருவராக்கிவிடும்!

அவ்வாறில்லாமல் அடங்காமைஎனும் ஆணவம்கொண்டு ஒருவன் நடப்பானாகில் அந்த ஆணவம் அவனை தோல்விஎனும் கடுமையான இருளில் கொண்டு போய்த்தள்ளி விடும்! 


உய்க்கும் = கொண்டு சேர்க்கும்
ஆரிருள் = கடும் இருள்

திருக்குறளும் என் பார்வையும்..!- 013


திருக்குறள் (13)


தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்.
 (619)

ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும் முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்!

நாம் கடினமாய் உழைத்தும் அதற்குரிய பலன்களை அந்த இறைவன் வழங்காது போனாலும் நாம் முயற்சித்த பலன்களை நாம் கண்டிப்பாக அடைந்தே தீருவோம்! 

இறைநம்பிக்கை உள்ளவர்க்கு தான் உழைத்த உழைப்பின் பலனை இறைவன் வழங்கிடுவான்! அவ்வாறு இறை நம்பிக்கை இல்லாதவர்கள் விரக்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை! அவர்களுக்கு தமது உடல் வருத்தத்திற்கேற்ற ஊதியம் கிடைத்தே தீரும்

திருக்குறளும் என் பார்வையும்..!- 012


திருக்குறள் (12)

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. (129)


தீயினால் சுட்ட புண்ணின் வடு வெளியே இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்;ஆனால் நாவினால் தீய சொல்கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது!

நம் உடலில் தீப்பட்டு புண்ணாகி விட்டால் அந்த தீக்காயமானது உள்ளுக்குள் ஆறிவிடும்! அதிக பட்சம் ஒரு மாதமோ இருமாதமோ கழிந்து அந்த புண் ஆறிவிடும்!மேலே வடு மட்டும் இருக்கும்!

ஆனால் ஒருவரை நாம் கடிந்து கூறி விட்டால் அந்த காயமானது ஆறவே ஆறாது! என்றென்றும் அது மறையாது! 


நாம்கொட்டிவிட்ட வார்த்தைகளைத் திரும்ப அள்ளிடவோ அதனை அழித்திடவோ முடியாது! காலம் காலமாய்அழியாத தழும்பை நம் உள்ளத்தில் ஏற்படுத்திவிடும் நாம் கூறிய கடும் சொற்கள்!

எனவே நண்பர்களே! யாரையும் கடுமையாய் பேசாதீர்கள்!

திருக்குறளும் என் பார்வையும்..!- 011


திருக்குறள் (11) 

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. 
(90)

அனிச்சமலர் சிறிது முகர்ந்தாலே வாடிவிடும். அதைப்போல நமது விருந்தினர் நாம்சிறிது முகம் மாறிப்பேசினாலே வாடி விடுவர்:ஓடி விடுவர்! 

விருந்தினர் என்பவர் தெய்வம் போன்றவர்! அவர்கள் நம்மில்லம் வரும்போது நாம் ஒன்றை நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும்!
அவர்கள் வீடு வாசல் இல்லாமலோ உண்ண உணவு இல்லாமலோ நம்மைத்தேடி வரவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!
நம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாய் நம்மில்லம் வரும் அவர்களை நாம் இன்முகத்துடன் வரவேற்று அவர்கள் அகமும் முகமும் மலர உபசரிக்க வேண்டும்! அவர்களைச் சற்றே முகம் கோணிப்பார்த்தாலும் அவர்கள் முகமும் அகமும் வாடிவிடும்! எதுபோல என்றால் முகர்ந்தாலே வாடிப்போகும் அனிச்சமலர் போல என்கிறார் திருவள்ளுவர்!


மோப்ப = முகர
குழையும் = வாடி விடும்
விருந்து = விருந்தினர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 010


திருக்குறள் (10) 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் பூசல் தரும்.
 (71)

அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? அன்புடையார்க்கு ஏற்பட்ட துன்பம் கண்டவிடத்துத் தம்மையறியாமல் வெளிப்படும் சிறு கண்ணீரே அன்பைத் தெரியப்படுத்திவிடும்.

நாம் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவ்ர் மீது செலுத்தும் அன்பைப் பூட்டிவைக்கும் வலுமையான் பூட்டு இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை!

நாம் யார் மீது அன்பு செலுத்துகிறோமோ அவர் புண்படும்போதும் துன்பப்படும்போதும் நம்மை அறியாமல் நம் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீர் அவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திவிடும்!

தாழ் = பூட்டு
ஆர்வலர் = அன்புடையோர்
புண் = துன்பம்
பூசல் = சான்று

திருக்குறளும் என் பார்வையும்..!- 009


திருக்குறள் (9) 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
 (788)

உடை நெகிழ்ந்தவனுடைய கை உடனே உதவிக்காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு!

நாம் ஒரு சபையில் இருக்கும் போது பலர் முன்னிலையில் நாம் உடுத்திய உடை நழுவினால் நமது கைகள் உடனே விரைந்து சென்று நழுவும் உடையை சரிப்படுத்த விரையும்! சரியா இல்லையா?

அதைப்போல ஒரு நண்பனுக்கு ஒரு துன்பம் நேரும்போது என்ன ஏதுவென்று ஆராய்ந்துகொண்டு நேரத்தை விரையம் செய்யாமல் உடனே ஓடி அந்த துன்பத்தை நீக்க முயல்வதுதான் உண்மையான நட்பு என்று வள்ளுவர் கூறுகிறார்!


உடுக்கை = உடை
இடுக்கண் = துன்பம்
களைதல் = நீக்குதல்

திருக்குறளும் என் பார்வையும்..!- 008


திருக்குறள் (8) 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
 (1033)

உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும்பிறரைத்தொழுதுண்டு பின்செல்கின்றவரே. 

இவ்வுலகத்தை நடத்திச்செல்பவர் யார் தெரியுமா?
மற்ற மனிதர்க்கெல்லாம் உழுது பயிர் செய்து உண்ண உணவளிக்கும் உழவர்தான்!
மற்ற எல்லோரும் அவரைத் தொழுது பின் செல்ல வேண்டியவரே ஆவார்!
சாப்பாடு தானெ முக்கியம் ஒரு மனிதனுக்கு?


அவங்க சேத்துல கைவைக்கலைன்னா நாம எல்லாம் சோத்துல கைவைக்கமுடியுமா?

திருக்குறளும் என் பார்வையும்..!- 007


திருக்குறள் (7) 

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின். 


தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப்போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்!

கவரிமான் என்றொருவகை மான் உண்டு.அதன் சிறப்புக்குணம் என்ன வெனில் தன் உடலிலிருந்து முடி கொட்டினால் அது உயிர் வாழாது!

அதைப்போல் தன்மானத்தை உயர்வாக மதிக்கும் சான்றோர் தமது தன்மானத்துக்கு இழுக்கு வந்து விட்டால் அதைத் தாங்க மாட்டர்கள்!
தம் உயிரை மாய்த்துக்கொள்வர்! 


அன்னார் = போன்றவர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 006

திருக்குறள் : (6) 


விலஙகொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரொடு ஏனை யவர். 
( 410 )

அறிவு விளங்குவதற்குக்காரணமான நூல்களைக் கற்றவர்களோடு கல்லாதவர் மக்களோடு விலங்குகளுக்கு உKள்ல அவ்வளவு வேற்றுமை உடையவர்.

கற்றவர் மக்களைப்போலவும் கல்லாதவர் விலங்குகளைப்போலவும் நடந்து கொள்வர்!
விலங்குகளாகத்தான் எல்லோருமே பிறக்கிறோம். ஆனால் சிறந்த நூல்களைக் கற்பதால் ஒருவன் விலங்கிலிருந்து வேறு பட்டு சிறந்த மனிதனாகிறான்! 


அனையர் = போன்றவர்
இலங்கு = விளக்கமான
ஏனையவர் = மற்றவர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 005

திருக்குறள் : (5) 


எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு. 
( 423 )

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக்காண்பதே அறிவாகும்.

பல பேர் பலவிதமா சொல்லலாம்! கேட்கிற நமக்கு தான் சுய அறிவு இருக்கனும்!

யார் என்ன சொன்னாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து அதில் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும்! 


இந்த உலகம் பலவிதமாய் பேசும்! யார் எப்படி சொன்னாலும் சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதிலுள்ள உண்மையானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே அறிவு!

வாய் = வழி/ மூலம்

திருக்குறளும் என் பார்வையும்..!- 004

திருக்குறள் : (4) 


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. 
(786)

முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று! நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டுநட்புச்செய்வதே நட்பு ஆகும்!

நட்பென்பது வெறும் முகம் மகிழ வேண்டி இனிமையான பேச்சுக்களைப் பேசி பழகுவது அல்ல.

உண்மையான நட்பென்பது உள்மனத்தை மகிழவைப்பதாக இருக்க வேண்டும். 


திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?

வெறும் இனிமையான பேச்சுக்களை நம்மை மகிழ்விக்க பேசுபவன் உண்மையான நண்பன் அல்ல! நம் மனத்தை நல்லவிதமாக மாற்றி நமக்கு தேவையான நேரத்தில் நம்மை தட்டிக்கேட்டு நல்ல அறிவுரைகளைக்கூறி நல்வழிப்படுத்துபவனே உண்மையான நண்பன்! 

நக = மகிழ வைக்க
அகம் =உள்

திருக்குறளும் என் பார்வையும்..!- 003

திருக்குறள் : (3) 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
 (72)

மனதில் அன்பு இல்லாதவர்கள் இந்த உலகில் காணக்கிடைக்கும் எல்லாவற்றையும் தமது தமது என பரபரப்பார்கள்! மனம் நிறைந்த அன்புடையவர்கள் தமது எலும்பைக்கூட பொருட்படுத்தாமல் பிறக்கு வழங்கி மகிழ்வார்கள்.

இந்த உலகத்துல இருக்கும் மனிதர்களை இரண்டு விதமா பிரிக்கலாம்!

1. அன்புடையார்.

2.அன்பிலார் 


இரண்டாம் வகை மனிதர்கள் சுயநலக்காரர்கள்.
அவர்கள் எல்லாம் தமதென்று நினைப்பவர்கள். இவ்வுலகத்துக்கு தேவை இல்லாதவர்கள்.

முதல் வகை மனிதர்கள்தாம் இவ்வுல்கை நடத்துபவர்! அவர்கள் பிறருக்காக தம் எலும்பையும் தரத் தயாராய் இருப்பவர்கள்!
அவர்கள் தியாகச் செம்மல்கள்! 


என்பு = எலும்பு

திருக்குறளும் என் பார்வையும்..!- 002

திருக்குறள் : (2) 


எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின். 
(666)

தாம் நினைத்த செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பவர் யார் தெரியுமா?
அந்த செயல்களை எப்படியும் செய்தே தீர வேண்டும் என்று உறுதியாக நினைப்பவர் தான்!
அதன் உள்ளர்த்தம் என்ன என்றால் ஒரு காரியம் நடத்த ஒரு முடிவு எடுத்தால் அந்த உறுதியில் முனைப்பாக இருக்கவேண்டும்! அப்போது தான் வெற்றி பெற முடியும் எனபதுதான்! 


எண்ணிய= எண்ணியது
எண்ணியாங்கு=எண்ணியபடி
எய்துவர்= வெற்றி பெறுவர்
எண்ணியர்= எண்ணுபவர், நினைப்பவர்
திண்ணியர்- உறுதியானவர்
பெறின்=பெற்றால்

திருக்குறளும் என் பார்வையும்..!- 001

திருக்குறள் : (1) 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
 ( 314 )


தமக்கு தீங்கு செய்பவரைத் தண்டிக்க ஒரே சிறந்த வழி என்னதெரியுமா?
அவரே வெட்கப்பட்டு தலை குனியும் வண்ணம் அவருக்கு நன்மை செய்தல தான்!


தமக்கு தீங்கு செய்பவரிடம் பகைமை பாராட்டுவதால் அவருடனனான பகைமை மேலும் பெருகுமே தவிர குறைவதில்லை! விளைவு? நாம் ஒரு நண்பரை இழப்பது மட்டுமல்ல- ஒரு பகைவரை ஏற்படுத்திக்கொள்வதும் தானே? ஆக இரட்டை நஷ்டம்!
எனவே தான் வள்ளுவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறுவது எப்படி என்று கூறுகிறார்!
அவர் சொல்லும் வழியின் மூலம் ஒரு பகைமை ஒழிவதோடு ஒரு நட்பும் வளர வாய்ப்புகள் அதிகம்.


சொற்பொருள்:

இன்னா = தீங்கு
ஒறுத்தல் = தண்டித்தல்.
நாண = வெட்கப்படுமாறு
நன்னயம் = நல்+ நயம் = நற்செயல்