Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 033


திருக்குறள் (33) 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.(291)


வாய்மை அதாவது உண்மை என்று சொல்லப்படுவது எதுஎனில் எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படாத வகையில் சொல்லப்படுதல் யாவும்தான்!

வள்ளுவர் கூற விழைவது யாதெனில் சில சமயங்களில் உண்மையை சொல்லாமலும் இருக்கலாம்; அதனால் சில உயிர்களுக்கு நன்மை கிடைக்குமெனில்!

உண்மை யென்பதும் பொய்யென்பதும் பிற உயிர்களுக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பொறுத்ததுதான்! 

நம்மால் சொல்லப்படும் ஒரு பொய் ஓர் உயிரைக்காக்குமெனில் அப்பொய் மன்னிக்கப்படுகிறது என்பதும் நாம் கூறும் உண்மை ஒருவருக்குத் தீமை விளைவிக்குமெனில் அவ்வுண்மை தவிர்க்கப்படலாம் என்பதும் வள்ளுவர் கூற விழைவதாகும்.

திருக்குறளும் என் பார்வையும்..!- 032


திருக்குறள் (32) 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யறக
சான்றோர் பழிக்கும் வினை. 
(656)


பெற்ற தாயே பசித்து வருந்தி இருந்தாலும் பெரியோர் பழிக்கின்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது. 

உலகில் ஒருவனுக்கு மிக உயர்ந்த உறவு தாய் உறவு ஆகும்! அந்த தாயே பசியுடன் இருந்தாலும் அந்த பசியைப்போக்கக் கூட ஒருவன் பெரியோர் தாழ்வாக நினைக்கும் செயல்களைச் செய்யக்கூடாது! 

தாயிற்சிறந்த தொரு கோயிலில்லை என்றாலும் உலகம் பழிக்கின்ற செயலைத் தாய் காரணமாகக்கூட செய்யக்கூடாதென்பதும் சிறந்த தாய் இதை சற்றும்விரும்ப மாட்டாள் என்பதும் வள்ளுவ கருத்து.

ஈன்றாள் = தாய்
பழிக்கும் = தாழ்வாக நினைக்கும்
வினை = செயல்

திருக்குறளும் என் பார்வையும்..!- 031


திருக்குறள் (31) 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. (1081)


சோலையில் தலைவியைக் கண்ட தலைவன் அவள் அழகைக்கண்டு கீழ்க்கண்டவாறு வியக்கிறான்:

இங்கே தனிமையில் வந்து மிக ஒயிலாக அழகு மயிலாக காதுகளில் கனத்த குழல்களை அணிந்து அழகே உருவாக நிற்கும் இந்த வஞ்சிமகள் கொஞ்சுதமிழ் பேசும் பெண்தானா? இல்லை தேவலோகத்திலிருந்து மெதுவாக இறங்கிவந்த தேவதையோ? இவள் யாரென்று அறிய முடியாமல் என் மனம் மிகவும் மயங்குகிறது! 


திருக்குறளும் என் பார்வையும்..!- 030


திருக்குறள் (30) 

தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து. (828)


எதிரிகள் நம்மைத் தொழும்கைகளில் கொலைக்கருவி மறைந்திருப்பது போல அவர்கள் விடும் கண்ணீரிலும் கொலை ஆயுதம் மறைந்திருக்கும்! 

நம் எதிரிகள் நம்மைக் கண்டு கைகூப்பி வணங்கும்போது நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்! காரணம் என்ன வென்றால் அவர்களின் தொழும் கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும்! அவர்கள் விடுகின்ற கண்ணீரில்கூட கொலைநோக்கமே நிறைந்திருக்கும் என்று நாம் உணரவேண்டும்! 

ஒன்னார் = ஒத்தவர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 029


திருக்குறள் (29) 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
 (396)

மணல் கேணியானது தோண்டத்தோண்ட நீரூறி நமக்கு தாகத்தைத் தணிப்பது போல் நாம் கற்கும் நூல்களானது கற்கும்தோறும் நமக்கு அறிவை வழங்கிவருகிறது! 

எப்படி கிணறு நமக்கு எத்தனை ஆழம் தோண்டத் தோண்ட நீர் வழங்கி
நமது தாகத்தைத்தீர்த்து வைக்கிறதோ அதைப்போல நாம் கற்கும் நூல்கள் நமக்கு அறிவுத்தாகத்தைத் தீர்த்துவருகிறது! 


தொட்டனைத்து = தோண்டும்போதெல்லாம்
கேணி = கிணறு

திருக்குறளும் என் பார்வையும்..!- 028


திருக்குறள் (28) 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 
( 127 )

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக்காக்கத் தவறினாலும் நாவை மட்டுமாவது காக்க வேண்டும்! காக்கத்தவறினால் சொற்குற்றங்களால் அவமானப்பட்டு துன்பமடைய நேரிடும்! 

நாம் காக்க வேண்டிய புலன்கள் ஐந்து!

1.கண் = தீயவற்றினைப்பார்ப்பதிலிருந்து
2.காது = பொல்லாதவை கேட்பதிலிருந்து
3.மூக்கு = சில நறுமணங்களும் அவற்றால் வரும் தீங்குகளிலிருந்தும்
4.உடல் = தீயவற்றை அனுபவிப்பதிலிருந்து
5.நாக்கு = பொல்லாங்கு கூறுவதிலிருந்து 


இவற்றில் எவற்றைக் காக்கத் தவறினானும் துன்பங்கள் தாம் வந்தடையும் என்பதில் ஐயமில்லை! ஆனால் இவற்றுள் மிக முக்கியமாய் கட்டுப்படவேண்டியது நாக்கு! 

சோற்றைக் கொட்டினால் அள்ளிவிடலாம்.ஆனால் கொட்டிய சொற்களை அள்ளமுடியாது அல்லவா? 

யா காவார் = யாது காக்காவிடினும்
சோகாப்பர் = துன்பப்படுவர்

திருக்குறளும் என் பார்வையும்..!- 027


திருக்குறள் (27) 

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 


மற்றவரிடம் காணும் குறறங்களைத் தம்மிடமும் காணும் உள்ளம் நம்மிடம் இருந்தால் இந்த உலகத்தில் எந்த மனிதருக்கும் தீங்குகளே இல்லை!
மனிதருக்கு எப்போதுமே பிறர் மீது குற்றம் சாட்டுவதுதான் இயல்பாக இருந்து வருகிறது! தம் குற்றத்தைப் பற்றி எண்ணுவதே இல்லை!
ஆனால் பிறர் குற்றத்தைப்போல் தம்குற்றத்தையும் காணும்போது அங்கே புரிதல் வருகிறது! எந்த வித தீங்கும் வருவதில்லை! 


ஏதிலார் = அயலார்
தீது = தீங்கு
மன்னும் = நிலை பெற்ற